பக்கங்கள்

புதன், 10 ஜனவரி, 2018

பண்டைய நாவித அறுத்துவர்கள்


-டாக்டர் சு.நரேந்திரன்



அறுவை மருத்துவர்கள்

வரலாற்றின் இடைக்காலத்தில் நாவிதர் களே பொதுவான மருத்துவ சிகிச்சையை எல்லோருக்கும் செய்து வந்தனர் என்றா லும் குறிப்பாகப் போர்க் காலங்களிலும், அதன் பிறகு ராணுவ வீரர்களுக்கு மருத்து வமும், அறுத்துவமும் புரிந்தனர்.  இதன் காரணமாக இவர்கள் தங்கள் வசம் தீட்டிய கத்தி ஒன்றை வைத்திருப்பது வழக்கம்.

அதன் தொடர்ச்சியாக மருந்துகளால் நோய் குணமாகாது என்று மருத்துவர் களால் எண்ணப் பட்ட பொழுது அவர்கள் கட்டளைப்படி நாவிதர்கள் தேவையான அளவு கீறியோ அல்லது அட்டையைக் கடிக்கவிடுவதன் (Leeches) மூலமாகவோ இரத்தத்தை வெளியேற்றினர்.  இதை ஏன் மருத்துவர்கள் நாவிதர் களிடம் ஒப்படைத் தனர் என்றால், இது தனக்கு தரக்குறை வானது என்று எண்ணியதாலேயே ஆகும்.

பண்டைய காலத்தில் உலகளவில் நாவிதர்கள்

இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யும் நாவிதர்கள் சங்கம் (Guild of Surgeons) 
1318இல் உருவானது.  1505ஆம் ஆண்டு பாரீஸ் பல்கலைக் கழகத்தில் நாவி தர் அறுவை மருத்துவர்களைப் பேராசிரி யர்களாக நியமனம் செய்தது.  இங்கிலாந் தில் 1540இல் நாவிதர்கள் அறுவையாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தார்கள் (Company of Barber - Surgeons). ஆனால், நடைமுறையில் முடிவெட்டுதலையும், சவரம் செய்தலையும் செய்து வந்த நாவி தர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.  பிரான்சில் 1743ஆம் ஆண்டிலும் இங்கிலாந்தில் 1745ஆம் ஆண்டிலும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நாவிதர்களிடமிருந்து பிரிக் கப்பட்டு இருந்தனர்.  1800ஆம் ஆண்டில் ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் தோற்றுவிக் கப்பட்டதிலிருந்து நாவிதர்கள் இணைப்பை இச்சங்கம் முழுமையாகத் துண்டித்தது.  இதன் எச்சமாகவே இன்றும் இங்கிலாந்தில் எம்.ஆர்.சி.எஸ்.  என்ற அறுவை சிகிச் சைப்பட்டம் பெற்ற பின்பு டாக்டர் என்று அழைக்கப்படாது திரு, திருமதி, செல்வி (Mr, Mrs, Miss) 
என்றே பட்டத்திற்கு முன் போட்டுக் கொள்கின்றனர்.

நாவிதர்கள் அறுவை சிகிச்சையின் முன்னோடிகள்:

உலகில் நாவிதர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், பேராசிரியர்களாக இருந்தனர் என்பதைத் தாண்டி, இந்தியாவில் அறுவை சிகிச்சை முறையைக் கண்டுபிடித்து வளர்த்தது நாவிதர்களேயாவர்.  இது குறித்து பண்டைய வரலாற்றறிஞரான டி.டி. கோசாம்பி, “போரில் அல்லது நோயில் மூக்கிழந்தோருக்கு மாற்று மூக்கு ஒட்டறுவை முறை, சமூகத்தினர் சற்று அருவருப்புடன் நோக்கிய நாவிதரின் கண்டுபிடிப்பே” என்கிறார்.  இது தவிர இந்நாவிதர்கள் சமூகத்தைச் சேர்ந்த உபாலி என்பவர் பவுத்த சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.  இப்பவுத்தர்கள் காலத்தில் தான் மெய்ஞான அறிவியலோடு அறுவை சிகிச்சையானது தோன்றி வளர்ச் சியடைந்ததாக வரலாற்றறிஞர் வாட்ஸ் குறிப்பிடுகின்றார்.

ஆனால், இன்றைய நிலையில் தமிழ் நாட்டுக் கிராமங்களில் மக்களுக்குத் தேவையான முக்கியமான பணிகளை செய்துவந்த 18 வகைத் தாழ்த்தப்பட்ட இனங்களுடன் நாவிதர்களும் அடங்குவர்.  இந்த இனத்தினர் யாவரும் குடிமக்கள் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.  இப்பதி னெட்டு வகை இனத்தவரும் குடிமக்கள் பிரிவினைச் சேர்ந்தவராகக் கருதப்பட்ட போதிலும் நாவிதக் குலத்தைச் சேர்ந்தவர் மட்டிலும் குடிமக்கள் என்ற பெயரை இன்றுவரை தக்க வைத்துக் கொண்டிருக் கின்றனர்.  ஏனெனில் கிராம மக்களுக்கு முடி வெட்டும் சேவையுடன் மங்கலக் காரி யங்கள் மட்டுமின்றி அமங்கலக் காரியங் களுக்கும் அவசியமான பணிகளை நாவி தர்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

இவைகளைக் கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகின்றன.  சான்றாக மங்கலச் சடங்கு களின்போது அடிப்படைப் பணி களில் நாவிதர்கள் ஈடுபட்டிருந்தமையால் அவர்கள் மங்கல வினைஞர், மங்கலையன் என்றும், நாவிதப் பெண் மங்கலை என்றும் அழைக்கப்பட்டனர்.  இதுவே, கொங்கு மண்டல சதகத்தில் மங்கலை எனும் சொல் நாவிதப் பெண்ணைக் குறிப்பிடப் பயன் படுத்தப் பட்டுள்ளது.  மங்கலம் என்னும் சொல் மருத்துவ குலத்தைச் சேர்ந்தோரின் பெயர்களுடன் இணைத்துக் காணப்படு வதாக முதுநிலை கல்வெட்டாய் வாளர்கள் ஏ. சுப்பராயலுவும், கே.ஜி. கிருஷ்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள்.  இவ்வாறு பெயர் களுடன் மங்கலம் என்ற அடைமொழியும், இணைக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் சில சான்றுகளாவன. “மூவேந்தர் மங்கலப் பேரரையன் மாறன்காரி”, “பாண்டி மங்கல விசையரையன் மாறன் எயினன்” என்ப தாகும்.

அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புக ளுக்கும், வளர்ச்சிக்கும் தேவையானது உடல்கூறு அறிவு. இதற்குச் சவப் பரி சோதனை அவசியம்.  இது இந்தியாவில் இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு விதி யாகப் பிணம் எரிக்கப்படுவதாலும், அல்லது ஆற்றில் மிதக்க விடுவதாலும் மற்றும் மனு சாஸ்திரம் ஒரு சண்டாளனை, ஒரு பிரே தத்தை அல்லது பிரேதத்தைத் தொட்ட ஒருவனை யதேச்சை யாகத் தொட நேர்ந்து விட்டால் குளிப்பதன் மூலம் மீண்டும் ஒருவன் தனி பரிசுத்தத்தைப் பெறுவான் என்பதாலும், புத்த சமண மதங்களும், திருக் குறளும், கொல்லாமையைப் போற்றுவதா லும் உடல்கூறு தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே தழைக்கவில்லை எனலாம்.  இக்காரணத்தை மிகவும் துல்லிய மாக ஆய்ந்த சட்டோபாத்தி யாயா அறுவை சிகிச்சைக்கான வளர்ச்சியில் மேல் சாதியி னருக்கு எவ்விதப் பங்கும் இருந்திருக்க வில்லை என்பதை விளக்கமாக “உடலை முதன்மைப் படுத்தியதால்தான் தந்திரர் ரசவாதம், ரசாயனம் போன்ற அறிவியல் களை வளர்க்க முடிந்தது.  வைதீகர், தூய ஆன்மாவைத் தேடியதால் உடம்பின் மீது கவனம் செலுத்தவில்லை.  பிணங்களை வைத்துக் கீழ் சாதியினரே அறுத்து ஆராய்ந் தார்கள்.  இதை மேல் சாதியினர் தீட்டாகக் கருதியதால் ஒதுக்கினார்கள்.  தவிர ‘தந்தி ரரின் சவ சாதனை’ மனித உடல் பற்றி அவர் கள் அறிய உதவியது.  இன்றும் கூட, (1959) பிணத்தைத் தொட மேல்சாதியார் மறுப்ப தால் அறிவியலை மறுக்கிறார்கள்”, என்கிறார்.

சோழர் காலத்தில் அறுவை மருத்துவர்கள் - நாவிதர்கள்

சோழர் காலத்தில் நாவிதர்கள் மிகவும் உன்னத நிலையில் சிறப்புற்றிருந்தது கல் வெட்டுக்கள் மூலம் அறிய முடிகின்றது.  இராஜராஜனின் கி.பி. 1014-ஆம் ஆண் டைய கல்வெட்டொன்றில் பஞ்சவன் மங் கலப் பேரரையன் அனையன் பவருத்திரன் மற்றும் இராஜராஜ பிரயோகத்தரையன் என்னும் பெயர் கொண்ட அறுவை சிகிச்சை செய்தவர்களைப் பற்றிக் குறிப் பிடப்பட்டுள்ளது.  பிரயோகம் என்ற சொல் மருத்துவ சிகிச்சையைக் குறிப்பிடும் சொல் லாகும்.  எனவே பிரயோகத்தரையன் என்ற சொல் மருத்துவ சிகிச்சை செய்பவனைக் குறிப்பிடு வதாகும். அனையன் பவருத் திரன் என்பவர் கோலினமை (கோலினமை - கோலி - மயிர்) என்ற தொழிலில் வல்ல வன் என்ற குறிப்பு வருகின்றது.  இப்பெயருக்கு அருகில் இராஜராஜ பிரயோகத் தரையன் என்ற சொல் மருத்துவரைக் குறிக்கும்.  அம்பட்டன் என்ற சொல்லும் மருத்துவரைக் குறிக்கும்.  எனவே கோலினமை என்ற சொல்லும் மருத்துவத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும் என்று கல்வெட்டாய்வாளர் ஏ. சுப்பராயலு கருத்துத் தெரிவிக்கின்றார்.

திருவிடலூர் சிவயோகநாதர் ஆல யத்தில் கண்டெடுக்கப்பட்ட முதலாம் இராஜராஜ சோழனின் கி.பி. 1016ஆம் நாளிட்ட கல்வெட்டில் இராணி குந்தவை ஆர்க்காட்டு கூற்றம் சிறீ பராந்தக சதுர்வேதி மங்கலத்துச் சபையிடமிருந்து நிலம் விலைக்கு வாங்கி அரையன் உத்தம சோழன் என்ற நாவிதனுக்குச் சல்லிய போகமாக வழங்கியதாகக் கூறப்பட்டுள் ளது. ((ARE No. 351/1907)

இதே ஆலயத்திலுள்ள மற்றொரு கல் வெட்டில் குந்தவை, இராஜகேசரி சதுர் வேதி மங்கலத்திலுள்ள ஒரு வேலி 4 மா நிலத்தையும், வேம்பத்தூரிலுள்ள ஒரு வீட்டையும் அரையன் உத்தம சோழன் என்ற இராஜேந்திர சோழ பிரயோகத் தரையன் ஆகிய அம்பட்டனுக்குச் சல்லிய கிரியா போகமாக (அறுவை மருத்துவத் தொழிலை விருத்தியடையச் செய்வதற் கான மானியத்தின் பெயர்) வழங்கி யிருப் பது தெரிய வருகின்றது. (ARE No.  350/1907)

இவ்விடத்தில் மருத்துவக் கண்டுபிடிப் புக்கு வித்திட்டவர்கள் இச்சாதியின ஆண் களா? அல்லது பெண்களா? என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது.  பண்டைய காலத்தில் சடங்குகளைப் பெண்களே முன் னின்று நடத்தினர்.  இன்றும் கிராமப்புறங் களில் “பாட்டி வைத்தியம்” என்ற பெயர் புழக்கத்தில் இருப்பது அன்று பெண்களே மருத்துவம் செய்தனர் என்பதற்கு எடுத்துக் காட்டாகும்.

இதற்கு ஒரு இலக்கிய சான்றாகக் கொங்கு மண்டலச் சதகத்தில் கார்மேகக் கவிஞர் (9ஆம் நூற்றாண்டு) விரிவாக எடுத் துரைக்கின்றார்.

கொங்கு நாட்டு மன்னனின் மகள் பிர சவ வலியால் துன்புற்றபொழுது சிசு வெளிவராத நிலையில் ஒரு நாவிதப் பெண், வயிற்றைக் கீறி (Caesarean) சிசுவை வெளியே எடுத்ததைச் சிறப்புற விளக்குவது இங்கு நினைவு கூரத்தக்க தாகும்.

இதுபோலவே வயிற்று வலி ஏற்படும் குழந்தைகளுக்குக் குடல் தட்டி இன்று வரை நிவர்த்தி அளிப்பதும் பெண்களே ஆகும்.  மேலும் நாவிதப் பெண்கள் இன் றும் பல கிராமங்களில் பிரசவம் பார்த்து வருவது என்பது ஆதிகாலத்தில் மருத்து வத்தைக் கண்டுபிடித்து அதனை வளர்த்து இன்று வரையில் தக்க வைத்துள்ளதின் எச்சமென்பதாகும்.

நாவிதப் பெண்கள் மருத்துவச்சி என்று அழைக்கப்பட்டு, காலனி அரசு காலத்திலும் பணிபுரிந்துவந்தபொழுது இவர்களின் மருத்துவமுறை மேலை மருத்துவத்தை ஒத்து வராது, தூய்மையற்று இருந்ததன் காரணமாக, 1923இல் காலனி அரசு இவர்கள் பணியை மேம்படுத்த பல முயற்சி களை மேற்கொண்டது.  மருத்துவப் பள்ளி கள், கல்லூரிகள் தோன்றிய பிறகும் தங்கள் பொருளாதாரப் பின்னடைவினால் மேலை மருத்துவம் கற்க வாய்ப்பின்றி போனார்கள்.  ஆகவே, இவர்களுக்குத் தெரிந்த தமிழ் சித்த மருத்துவத்தைச் சிக்கெனப் பிடித்தபடி மருத்துவம் புரிந்தனர்.  யூனிசெப் மற்றும் உலக சுகாதார கணக்குப்படி (1967) மருத்து வச்சிகளால் மட்டும் 70 விழுக்காடு பிரச வங்கள் நடைபெற்றுள்ளதாக அறிய முடி கின்றது.

இதுபோலவே நாவித வகுப்பு ஆண்கள் அறுவை சிகிச்சை உட்பட பல மருத்துவப் பணிகளைப் புரிந்துள்ளனர். இவர்களால் மருத்துவம் பெற்றுக்கொள்பவர்கள் மேல் குடி மக்களாக இருப்பினும் இவர்கள் கூறு வதைக் கேட்பது மக்கள் மத்தியில் வழக் கமாக இருந்ததன் காரணமாக “எத்தைச் சொல்வானோ பரிகாரி அத்தைக் கேட்பான் நோயாளி” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

முடிவாக, நாவிதர்களை நோக்கும் போது, உலக அளவில் அறுவை மருத்துவ முன்னோடிகளாக, அறுவைக்கான கத் தியை வைத்திருந்தவர்கள் இன்றைய நிலை யில் முடி வெட்டும் கத்திரிக் கோலுடன் வலம் வருவது ஏன் என்பதை இன்னும் விரி வாகக் கூறுபோட்டு ஆராய வேண்டியவர் களாக உள்ளோம் என்பது தெளிவாகின்றது.

- நன்றி: நியூ செஞ்சுரியின்

“உங்கள் நூலகம்” ஜூன் 2017
- விடுதலை ஞாயிறு மலர், 23.12.17