பக்கங்கள்

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய சித்தா மருந்துகள்!

 

மருத்துவம் : கரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய சித்தா மருந்துகள்!

2022 மருத்துவம் மே 16-31 2022

கரோனா தொற்றாளர்களுக்கு நோயின் தீவிரத்தைக் குறைப்பதில் நிலவேம்புக் குடிநீரும், கபசுரக் குடிநீரும் பெரும்பங்காற்றின. முதல் இரண்டு அலைகளில் அறிகுறிகளுடன் கூடிய நோய்த் தொற்றில் கபசுரக் குடிநீரும், அதனுடன் அமுக்கரா மாத்திரை, தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பிரம்மானந்த பைரவம் போன்ற மருந்துகள் நல்ல நலன் தருவதாக இருந்ததை ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.
மற்றொரு ஆய்வில் ஆங்கில மருந்துகளுடன் கபசுரக் குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, வசந்த குசுமாகரம் மாத்திரை, திப்பிலி ரசாயனம் ஆகிய சித்த மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது நல்ல பலன் தருவதாக அறியப்பட்டது.
கபசுரக் குடிநீர் பற்றிய ஆய்வுக்கூட சோதனை மற்றும் மருந்தியல் சோதனையில் வைரசின் அனைத்து உருமாற்றத்திலும் நல்ல பலன் தருவதாக வந்த முடிவுகள் சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
லேசான நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆடாதோடை குடிநீர் எடுக்கலாம். இதில் சேரும் அதிமதுரத்தில் உள்ள ‘கிலிசிரிஸின்’ என்னும் முக்கிய மூலக்கூறு ‘சார்ஸ்-2’ வகை வைரஸ் தொற்றை அழிக்கும் திறன் கொண்டதாக சீன நாட்டின் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
ஆடாதோடையில் உள்ள ‘ப்ரோம்ஹெக்ஸின்’ செயல் மூலக்கூறு மூச்சுக் குழாயை விரிவடையச் செய்து இருமலைக் குறைக்கும் தன்மை உடையது. மேலும் ‘திப்பிலி ரசாயனம்’ என்னும் சித்த மருந்து இருமலைக் குறைத்து கெட்டிப்பட்ட சளியை வெளிப்படுத்தும் தன்மையுடையது.
சுவாசப் பாதையை விரிவடையச் செய்து, கெட்டிப்பட்ட சளியை வெளியேற்றவும் ஆடாதோடை மணப்பாகு எனும் சித்த மருந்து பெரும் பயனளிப்பது உறுதி. மூச்சுத் திணறலைக் குறைக்கவும், கபத்தைப் போக்கவும் நொச்சி இலைக் குடிநீர் பயன்படுத்தி நல்ல பலன் காண முடியும்.
நொச்சி, மிளகு, பூண்டு, லவங்கம் போன்ற மூலிகைகளைச் சேர்த்து கசாயமிட்டு குடிக்க, மூச்சுக் குழல் வீக்கத்தைச் சரி செய்து ஆஸ்துமா, மூச்சுத் திணறல் ஏற்படாமல் தடுக்கும்.
சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகு சூரணம் என்ற சித்த மருந்துடனோஅல்லது தாளிசாதி சூரணம் எனும் சித்த மருந்துடனோ பவள பற்பம், சிவனார் அமிர்தம் ஆகிய மருந்துகளைச் சேர்த்து கரோனா கிருமியால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் கொடுக்க நல்ல பலனைத் தரும். ரத்தத்தில் டி_டைமர், பெரிடின் ஆகிய உயிர்வேதி அளவுகள் அதிகரித்து ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத் திணறல் ஏற்படும் நிலைகளில் ஆக்சிஜனுடன் சேர்த்து கிராம்பு சூரணத்துடன் அரிதார செந்தூரம், மகா பூபதி பற்பம், பவள பற்பம் ஆகிய மருந்துகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.
இந்நிலையில் பூர்ண சந்திரோதயம் போன்ற தங்கம் சேர்ந்த பெருமருந்தும் நற்பலனைத் தருவதாக உள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தயிர்ச்சுண்டி சூரணம், ஏலாதி சூரணம், நாக பற்பம் போன்ற சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள நல்ல பயனளிக்கும். ‘நாக பற்பம்’ எனும் சித்த மருந்தில் உள்ள துத்தநாகம் குடல் செல் ஜவ்வினை பாதுகாப்பதோடு, வைரஸ் பல்கிப் பெருகுவதையும் தடுக்கும் தன்மையுடையது.
நாம் உணவில் சேர்க்கும் மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ என்ற வேதிப்பொருளும், மிளகில் உள்ள ‘ஃபைப்ரின்’, பூண்டில் உள்ள ‘அலிசின்’, சீரகத்தில் உள் ‘குமினால்டிஹைடு’ போன்ற அல்கலாய்டு வேதிப்பொருள்களால் நோய் எதிர்ப்பு சக்தியை இயல்பாக அதிகரிக்க இயலும்.
வாழை இலையில் சூடான உணவு போட்டு, உண்பதுகூட நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். வாழை இலையில் உள்ள பிளவனாய்டு வேதிப்பொருள் உணவுடன் கலப்பதே அதற்குக் காரணம். எனவே, சித்த மருத்துவத்தால் எவ்வளவு பெரிய நோய்த் தொற்றையும் எதிர்கொள்ள இயலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக